×

படப்பிடிப்பு நடந்த இடத்தில் நடிகரின் உடல் அடக்கம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ப்ரெண்ட்ஸ்’ என்ற டி.வி தொடரில் இடம்பெற்ற சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த மேத்யூ பெர்ரி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. கடந்த 1994 முதல் 2004 வரை ஒளிபரப்பான அமெரிக்க டி.வி தொடர் ‘ப்ரெண்ட்ஸ்’. இத்தொடருக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது. மொத்தம் 10 சீசன்கள், 236 எபிசோடுகள் கொண்ட இத்தொடரில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். இதில் சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர், மேத்யூ பெர்ரி. 54 வயதான அவர், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தனது வீட்டில் பாத்டப்பில் இறந்து கிடந்தார்.

தண்ணீரில் மூழ்கியதால் மேத்யூ பெர்ரி உயிர் இழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு அருகில் போதைப்பொருட்கள் இருந்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் கூறினர். 1997 முதல் 2001ம் ஆண்டு வரை மேத்யூ பெர்ரி கடுமையான போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், ‘ப்ரெண்ட்ஸ்’ தொடரின் 3வது சீசன் படப்பிடிப்பு நடந்த ஞாபகமே தனக்கு இல்லை என்றும், அந்த அளவுக்கு தான் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறியிருந்தார். அவரது திடீர் மறைவுச்செய்தியை அறிந்த ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த மேத்யூ பெர்ரியின் உடல், அவர் நடித்து பிரபலமான ‘ப்ரெண்ட்ஸ்’ தொடரின் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதாவது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஃபாரஸ்ட் லான் மெமரியல் பார்க் மயானத்தில் மேத்யூ பெர்ரியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் ‘ப்ரெண்ட்ஸ்’ தொடரில் நடித்த ஜெனிபர் அனிட்ஸன், கோர்ட்டனி கோக்ஸ், லிசா குட்ரோ, டேவின் ஸ்விம்மர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேத்யூ பெர்ரியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மயானத்துக்கு எதிரிலுள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில், ‘ப்ரெண்ட்ஸ்’ தொடரின் படப்பிடிப்பு 10 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. இதைக் குறிப்பிட்டு ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

The post படப்பிடிப்பு நடந்த இடத்தில் நடிகரின் உடல் அடக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Matthew Perry ,Chandler Bing ,American TV ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உயிர் தமிழுக்கு திரை விமர்சனம்